சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் படகுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்றுத் தொடங்கி அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடக்கிறது.
ஆனால் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் படகு ஓட்டுதல் உள்ளிட்ட சிலப் போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவேத் தொடங்கிவிட்டது. இதில் ஆடவர் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய அணியின் சார்பாக அர்ஜுன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் பங்குபெற்றனர்.
கடந்த வியாழன் அன்று ஆடவர் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. இதன் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் அர்ஜுன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் இணைந்து பந்தய தூரத்தை 6.28 நிமிடத்தில் கடந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து படகோட்டுதல் ஆடவர் இணைப் பிரிவில் பாபு லால் யாதவ், லேக் ராம் வெண்கலம் இந்த இணைந்து பந்தய தூரத்தை 6.50. நிமிடத்தில் கடந்து மூன்றாவது இடம் பிடித்தனர். அதன் மூலம், இந்தியா வெண்கலம் வென்றது.