ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தற்போது ஒரு நாள் இடைவேளையில் மீண்டும் போட்டி நடைபெறுவதால், ஆஸ்திரேலியா அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் இன்றைய ஆட்டத்தில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
அவருக்கு பதில் கேப்டனாக ஸ்மித் பதவி ஏற்றார். இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த ஆடுகளம் சேசிங்கிற்கு தான் உதவும் என நான் நினைக்கிறேன். மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு வரும் என்பதால் பந்து வீச கடினமாகவும் பேட்டிங் செய்ய சுலபமாகவும் இருக்கும்.
இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம். அதே சமயம் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட வைக்க வேண்டும் என்பது குறித்தும் பரிசோதிக்க இருக்கிறோம். இதனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பல மாற்றங்களை செய்திருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் ஸ்பென்சர் ஜான்சன் விளையாடுகிறார். ஹேசல்வுட் அணிக்கு திரும்பி இருக்கிறார்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கேப்டன் கே எல் ராகுல், ” நாங்களும் முதலில் பந்து வீசதான் முடிவு செய்தோம். ஏனென்றால் இந்த மைதானம் மிகவும் சிறியது. இதனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது எத்தனை ரன்களை சேசிங் செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு தெளிவு இருக்கும். தற்போது முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.
எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ந்து இருக்கிறார். எங்களுடைய அனைத்து பேட்ஸ்மேன்களும் களத்தில் நின்று நேரத்தை செலவிடுவது மிகவும் முக்கியமாக கருதுகிறோம்.உலகக்கோப்பை தொடருக்கும் முன்பு மனதளவிலும் உடலளவிலும் சில வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால்,இந்த மாற்றத்தை செய்திருக்கிறோம் என்று” கூறினார்.