சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் வழக்கு, விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால், அதை உடைக்கும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஹார்ட் அட்டார்க் பிரச்சினை என்று சொன்னதால், தனியார் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14 -ம் தேதி மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.
இதனால், நாடாளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த 20 -ம் தேதி முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார். இதனால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்பு முடிவு செய்துள்ளது.
இதனிடையே, அமலாக்கத்துறை இயக்குநராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால், அவருக்குப் பதில் ராகுல் நவீன் என்பவர் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இவர் பதவியேற்றதும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக டெல்லியிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.