மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கார்யகர்த்தா மகாகும்ப நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், மத்தியப் பிரதேச மாநிலமும் ஒன்று. இதையடுத்து, இம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் களமிறங்கி இருக்கிறது. அந்த வகையில், கடந்த 15-ம் தேதி மத்தியப் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இவற்றில் பெட்ரோ கெமிக்கல் வளாகம் மற்றும் மாநிலம் முழுவதும் 10 புதிய தொழில்துறை திட்டங்கள் அடங்கும். குறிப்பாக, பிரதமர் அடிக்கல் நாட்டிய 10 திட்டங்களில் நர்மதாபுரம் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம் மற்றும் இந்தூரில் 2 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ரத்லமில் ஒரு மெகா தொழில் பூங்கா ஆகியவை முக்கியமான திட்டங்களாகும். இவற்றில் பினா சுத்திகரிப்பு ஆலையில் உள்ள பெட்ரோ கெமிக்கல் வளாகம் நாட்டின் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ (தன்னம்பிக்கை) திட்டத்தை நனவாக்க உதவும் என்று பிரதமர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, மக்கள் தொடர்புத் திட்டங்கள் தொடர்பான 5 யாத்திரைகளை பா.ஜ.க. முன்னெடுத்திருக்கிறது. இந்த யாத்திரைகளின் உச்சகட்டமாக, பா.ஜ.க. தொண்டர்களின் ‘கார்யகர்த்தா மகாகும்ப’ என்கிற மாபெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போபாலில் உள்ள ஜம்போரி மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த மாபெரும் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கட்சியின் சித்தாந்தவாதியான தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளில் காரியகர்த்தா மகாகும்ப நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெகா கூட்டத்தில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.