பாகிஸ்தான் நாட்டின் வறுமைக்கோடு நிலவரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், 34 சதவீதமாக இருந்த அந்நாட்டின் வறுமைக்கோடு அளவு திடீரென 40 சதவீதமாத அதிகரித்திருப்பதாகவும், பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் பாகிஸ்தான் இருப்பதாகவும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
சுதந்திரத்துக்கு ஒரு நாள் முன்பாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றது. இதன் பிறகு, இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து தற்போது உலக பொருளாதாரத்தில் 3-வது பெரிய நாடாகத் திகழ்கிறது. அதேபோல, விண்வெளித் துறையில் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியதின் மூலம் உலக வரலாற்றில் புதிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. இது மட்டுமா? நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தையும் இந்தியா அனுப்பி இருக்கிறது.
ஆனால், பாகிஸ்தானின் நிலைமை? கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த பாகிஸ்தான், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் நிதிச் சிக்கலில் இருக்கிறது. சொந்த நாட்டு மக்களுக்கு உணவு வழங்கக்கூட முடியாமல் திணறி வருகிறது. ஒரு மூட்டை கோதுமைக்கு அடித்துக் கொண்டு ஏராளமான உயிர்கள் பறிபோயிருக்கிறது. இதனால், உணவுத் தேவைக்கு உலக நாடுகளிடமும், நிதித் தேவைக்கு உலக வங்கியிடமும் கையேந்தி நிற்கிறது பாகிஸ்தான். இதற்கு அந்நாட்டில் தலைவிரித்தாடும் தீவிரவாதமும் முக்கியக் காரணமாகும்.
இந்த நிலையில்தான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றும்போது, நிலவில் தடம் பதித்தும், ஜி20 மாநாட்டுக்கு தலைமை வகித்து நடத்தியும் இந்தியா எங்கோ சென்றுவிட்டது. நாம்தான் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது. இங்கு பொதுத்தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சூழலில், ஊழல் வழக்குகளில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து வரும் அக்டோபர் 21-ம் தேதி நாடு திரும்புவதாக அறிவித்திருக்கிறார். இதையடுத்து, தேர்தல் வியூகம் குறித்து லண்டனில் இருந்தபடியே காணொளி வாயிலாக தனது கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டதில் பங்கேற்ற நவாஸ் ஷெரீப், “கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது.
உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேசமயம், இந்தியாவோ நிலவில் தடம் பதித்தும், ஜி20 மாநாட்டுக்கு தலைமை வகித்து நடத்தியும் எங்கோ சென்றுவிட்டது. இந்தியா செய்திருக்கும் சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை? இதற்குக் காரணம் நம் நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல்கள் மற்றும் நீதிபதிகள்தான். எதிர்வரும் தேர்தலில் நமது கட்சி பெரும்பான்மை பெறும். மீண்டும் ஆட்சியை பிடிப்போம்” என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இவ்வாறு கூறிய ஓரிரு நாட்களில், பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாகவும், அந்நாட்டில் வறுமைக்கோட்டின் அளவு 40 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுகுறித்து, உலக வங்கி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “பணவீக்கம், மின்கட்டண விலை உயர்வு மற்றும் போதுமான பொதுவளங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. அந்நாட்டு மக்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் பரிதவிக்கின்றனர்.
34 சதவீதமாக இருந்த பாகிஸ்தான் நாட்டின் வறுமைக்கோட்டின் அளவு ஒரே ஆண்டுக்குள் 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 32 முதல் 40 சதவீதம் வரை ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரியல் எஸ்டேட் மீது வரி விதிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, வீண் செலவினங்களைக் குறைக்க வேண்டும். பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருக்கிறது. பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு மாத கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை” என்று தெரிவித்திருக்கிறது.