சிவகங்கை மாவட்டம், கீழடி அருகேயுள்ள கொந்தகையில், நான்காம் கட்ட அகழாய்வில், முதுமக்கள் தாழியிலிருந்து இரு சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளில், பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரணப் பொருட்கள், செம்பு நாணயங்கள் உட்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்த அகழாய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை, மக்கள் பார்க்கும் வகையில், கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் ரூபாய் 18 கோடியே 46 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
8 கட்ட அகழாய்வு பணிகளின் தொடர்ச்சியாக, 9-ம் கட்ட அகழாய்வு பணி, கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வும், அதன் அருகேயுள்ள கொந்தகையில் 4- ஆம் கட்ட அகழாய்வும் நடைபெற்று வருகின்றன. கொந்தகை அகழாய்வில், ஒரு குழியிலிருந்து 46 சென்டி மீட்டர் ஆழத்தில் கருப்பு, சிவப்பு நிற முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
அந்த தாழியின் உள்ளே 2 சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த 2 மணிகளும் பீப்பாய் வடிவில் சராசரியாக 1.3 செ.மீ. நீளத்திலும், 2.3 செ.மீ. விட்டத்திலும் இருக்கிறது. அதில் ஒரு மணியில் அலை முறை மற்றும் வட்டக்கோடுகளுடன் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது.
சங்கக் காலத்தில் சூது பவளம் மணிகள் அழகுப் பொருட்கள் மற்றும் அணிகலன்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாகப் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்தான் இதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட சூது பவளம் மணிகள் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.