காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக நாளைய தினம் முழு அடைப்புக்கு அம்மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் லாரி, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விடுத்த உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக நாளைய தினம் முழு அடைப்புக்கு அம்மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
கர்நாடகாவுக்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் நாளைய தினம் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற உள்ளது. இந்த சூழலில் இன்று காலையே பெங்களூருவில் தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் மீதும் ஓட்டுநர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
இதனால் தேவையில்லாத அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நாளைய தினம் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா மற்றும் கர்நாடகா வழியாக வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகாவில் உள்ள லாரிகளை தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளிக்கு முன்பாக நிறுத்தி வைக்கும் படி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என்றும், நாளை மாலை 6 மணிக்கு மேல் சூழலுக்கு ஏற்ப சென்னை, பெங்களுருவில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.