தி.மு.க. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில், அரசுத் தரப்புக்கு ஆதரவாக எங்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கடந்த 2006 – 11 தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத்துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூந்துறை கிராமத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பொன்முடி, அவரது மகனும் தற்போதைய கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் 64 பேர் அரசுத் தரப்புச் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 11 பேரிடம் செப்டம்பர் 7-ம் தேதி வரை விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் 2 மட்டும் தங்களது சாட்சியைப் பதிவு செய்தனர். இவ்வாறு அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியம் அளித்ததால், மேற்படி வழக்கில் தன்னையும் ஒரு மனு தாரராகச் சேர்த்துக் கொண்டு, அரசுத் தரப்புச் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், அந்த மனுவில் அரசுத் தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனு தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், ஜெயக்குமாரை செப்டம்பர் 25-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். அதன்படி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது, இதுபற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பூர்ணிமா, மேற்கண்ட ஏற்பது தொடர்பாக அக்டோபர் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.