உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் சி-295 விமான இணைப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இந்திய விமானப் படைத் தளபதி வி.ஆா்.செளதரி, ஏா்பஸ் நிறுவன உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில், சி-295 விமானம் இந்திய விமானப்படையிடம் ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார். இந்த சி-295 விமானம், விமானப் படையின் வதோதரா விமானப் படை நிலையத்தில் செயல்பட்டு வரும் பழைமைவாய்ந்த 11-வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, ஹிண்டனில் ‘பாரத் ட்ரோன் சக்தி-2023’ கண்காட்சியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை இந்திய விமானப்படை மற்றும் இந்திய ட்ரோன் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில், நாடு முழுவதிலுமிருந்து 75-க்கும் மேற்பட்ட ட்ரோன் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ட்ரோன் உற்பத்தி மையமாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் வரும் ஆண்டுகளில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கான இரண்டு முக்கிய தூண்களாக உள்ளன என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.