கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் உள்ளிட்டவற்றைக் கடற்கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், கத்தி முனையில் மீனவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த மீன்கள் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான உடைமைகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடியக்கரை கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களின் 3 -வது தாக்குதல் சம்பவம் இது. ஏற்கனவே, இதுபோன்று 2 முறை நடைபெற்றுள்ளது. தற்போது, 3 -வது முறையாக நடைபெற்றுள்ளது.
ஒருபுறம் இலங்கை கடற்படையினர் மற்றொருபுறம் கடற்கொள்ளையர்கள் என மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாகவும், இதனால், கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் நாகை மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தமிழக மீன்வளத்துறைக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.