லிபியாவில் அணைகள் உடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக லிபியாவின் சட்டத் துறை உயரதிகாரி அல்-சித்திக் அல்-சூரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் காரணமாக டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகள் உடைந்தது தொடர்பாக நீா்வளத் துறையைச் சோ்ந்த 8 அதிகாரிகளைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களில், 7 போ் முன்னாள் அதிகாரிகள் மற்றும் ஒருவா் தற்போது பணியில் உள்ளார்.
இவர்களின் தவறான மேலாண்மை, அலட்சியம், தவறான முடிவுகள் போன்றவைகளை இந்தப் பேரிடருக்குக் காரணமாக அமைந்ததாக அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக, அந்நாட்டில் மிக கனமழை பெய்தது.
இதனால், கிழக்கு லிபியா பகுதியில் அமைந்துள்ள டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்தநதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
அந்நாட்டில் புயல், கனமழை மற்றும் அணைகள் உடைப்பால் 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.