மதுராவின் கிருஷ்ண ஜென்மபூமி நிலப் பிரச்சனை தொடர்பான அனைத்து மனுக்களையும், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தனக்கு மாற்றிய அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை அக்டோபர் 3-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தார். இந்த இடத்துக்கு அருகில் கத்ரா கேசவ் தேவ் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்குச் சொந்தமான 13.37 ஏக்கர் நிலத்தை மொகலாய அரசர் ஒளரங்கசீப் ஆக்கிரமித்து, 1660-70-ம் ஆண்டுகளில் ஷாஹி ஈத்கா மசூதியைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
எனவே, மேற்கண்ட இடத்திலிருந்து மசூதியை அகற்றி, நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று லக்னோவைச் சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர் மதுரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதேபோல, ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளைத் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, மசூதி தரப்பில் மதுரா நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி அற்க்கட்டளை மற்றும் ஷாஹி ஈத்கா மசூதி தரப்பில் மதுரா நீதிமன்றத்தில் இதுவரை 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை மதுரா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அனைத்து வழக்குகளையும் தனக்கு மாற்றி கடந்தாண்டு மே மாதம் 26-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கிருஷ்ண ஜென்மபூமி நிலப் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்துவரும் அனைத்து வழக்குகளின் விவரங்களையும் தெரிவிக்குமாறு, அலகாபாத் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அப்போது, கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பாக பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், மசூதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை 3 வாரங்கள் கழித்து பட்டியலிட்டது உச்ச நீதிமன்றம். இந்த சூழலில், மசூதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரி, பகவான் ஸ்ரீகிருஷ்ண விராஜ்மான் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு சஹ்கர் ஜெயின் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின், மசூதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் ஜூலை 21-ம் தேதிக்குப் பிறகு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆகவே, அந்த மனுவை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, இந்த மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டிய அவசியம் குறித்து நீதிபதி எஸ்.கே.கௌல் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு, கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக பல சிவில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இவ்வழக்கில் தீர்வுகாண அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் இதுவரை நீதிபதிகள் அமர்வை அமைக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இதுவரை தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லையே என்று கூறிய நீதிபதிகள், மசூதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது.