மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பைத் தடுக்க முடியாமல், மாநில அரசு திணறி வருகிறது.
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எல்லா மாநிலங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20-ந் தேதி வரை 38,181 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைமைச் செயலர் துவிவேதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், இரயில் நிலையம், சந்தைகள் போன்ற இடங்களில் தூய்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் திடீரென அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு காரணமாக, வாரத்தில் 7 நாட்களும் நகராட்சி சுகாதார மையங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்குச் சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளது.