ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டியில் பங்கேற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவின் இராஜதந்திரம் மற்றும் அறிவியல் சாதனைகளால் இந்தியா புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இந்தியா இந்தாண்டு ஜி20 அமைப்பின் தலைமைப் பதவியை வகித்த நிலையில், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், திறன் மேம்பாட்டு மாணவர்கள் உள்ளிட்டோருக்கு நாடு முழுவதும் கருத்தரங்கத்தை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள 101 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3,000 மாணவர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், “கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்த பாரத மண்டபம் பெரும் ஆரவாரத்துடன் காணப்பட்டது. இதே பாரத மண்டபத்தில்தான் எனது வருங்கால பாரதம் இருக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜி20 உச்சி மாநாடு மூலம் இந்தியா எட்டி இருக்கும் உயரத்தைக் கண்டு உலகமே வியப்படைந்து நிற்கிறது. ஆனால், எனக்கு ஆச்சரியம் இல்லை. ஏன் தெரியுமா? உங்களைப் போன்ற இளைஞர்கள் ஒரு நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளும்போது, அது வெற்றிகரமாக மாறும்.
ஜி20 உச்சி மாநாட்டுக்கு முன்பு பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது . இம்மாநாட்டில் இந்தியாவின் முயற்சியால் புதிதாக 6 நாடுகள் சேர்க்கப்பட்டன. இதுபோன்ற அனைத்து நல்ல செயல்களையும் செய்வதற்காகத்தான் நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
கடந்த 30 நாட்களை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அது புதிய இந்தியாவின் வேகம் மற்றும் அளவைப் பற்றிய ஒரு யோசனையை உங்களுக்குத் தரும். ஆகஸ்ட் 23-ம் தேதியை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். பின்னர், திடீரென அனைவரின் முகத்திலும் புன்னகை வந்தது.
இந்தியாவின் குரலை முழு உலகமும் கேட்டது. இந்தியா தற்போது நிலவில் உள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக நாட்டில் அழியாததாக மாறிவிட்டது. தனது சந்திர பயணத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியா சூரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பார்த்தீர்கள். இக்கட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதாவே நாடு முழுவதும் பெருமை சேர்த்திருக்கிறது. ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’ மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நாடாளுமன்றம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது.
மேலும், கடந்த 30 நாட்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. கைவினைஞர்களுக்காக பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கி இருக்கிறது” எனறு பிரதமர் மோடி கூறினார்.