கர்நாடகா மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளிலிருந்து கடந்த 4 நாட்களாக 5 ஆயிரம் கன அடிக்கு மேல், தமிழகத்திற்குக் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
தமிழ்நாட்டிற்குக் காவிரியிலிருந்து 3,000 அடி கன நீர் திறந்துவிட வேண்டும் எனக் கர்நாடகா அரசுக்கு, காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், காவிரி ஆற்றிலிருந்து விநாடிக்கு, 12,500 கன அடி திறந்துவிட வேண்டும் எனத் தமிழக அரசு கோரியிருந்த நிலையில், 3,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இந்த நிலையில், 4-வது நாளாக இன்றும் வினாடிக்கு 6 ஆயிரத்து 337 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று வினாடிக்கு 7ஆயிரத்து 134 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 3 ஆயிரத்து 837 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேபோல், கபினி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 384 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதைக் கண்டித்து, கர்நாடக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், காவிரி விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையைக் கடந்த காலத்தில் திமுக விட்டுக் கொடுத்தது. தற்போது, இண்டியா கூட்டணியில் உள்ளதால், காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற நோக்கில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாகத் தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.