இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை ராஜ்கோட்டில் 3 வது போட்டி நடைபெறவுள்ளது.
நடந்து முடிந்த இரண்டுப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று முன்னிலையில் உள்ளது. மேலும் உலகக் கோப்பைத் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அதில் இந்தியா தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8 ஆம் தேதி விளையாடுகிறது.
இந்நிலையில் இந்திய அணியை குறித்து முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேசியுள்ளார். இது குறித்து அவர், ” 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக உள்ளனர். அதனால் யாரை கீப்பிங் செய்ய வைப்பது என்னும் கேள்வி பெரியதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், ” கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இருந்தால் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வார் ஸ்ரேயாஸ் 4வது இடத்தில் பேட்டிங் செய்வார். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தரை விட அஸ்வின் சிறப்பாக விளையாடியதால் அஸ்வின் உலகக் கோப்பைக்கு விளையாட வாய்ப்புள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அஸ்வின் பந்துவீச்சில் நம்பிக்கை உள்ளது” என்றும் கூறினார்.
அஸ்வின் உலகக்கோப்பையில் பங்குப் பெற்றால் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் அஸ்வின் 8 வது இடத்தில் விளையாட வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
கிட்டத்தட்ட 20 மாதங்கள் இந்தியாவின் 50 ஓவர் அணியில் இருந்து வெளியேறிய அஸ்வின், சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் காயம் அடைந்ததை அடுத்து, அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் அக்சர் படேல் பங்குபெற முடியாமல் போனபோதும் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வந்தார். ஆனால் அந்த போட்டியில் பேட்டிங் செய்யவோ இல்லை பந்துவீசவோ சுந்தருக்கு வாய்ப்புக் கிடையில்லை.
அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் அஸ்வின் சிறப்பாக விளையாடி உள்ளதால் உலகக் கோப்பையில் இடம்பெற அஸ்வின்னுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.