தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய, நீர்மட்டம் 38.02 அடியாக உள்ளது.
குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதோடு, கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,943 கன அடியிலிருந்து 7,231 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 37.91 அடியிலிருந்து இன்று காலை 38.02 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.09 டிஎம்சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.