கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவிப்பது நாட்டின் 60 கோடிக்கும் மேற்பட்ட மக்களை நோக்கி அழைத்துச் செல்ல உதவும். நாட்டில் இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வடக்கு மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர்கள், டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களின் துணைநிலை ஆளுநர்கள், உறுப்பு மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள், மத்திய உள்துறைச் செயலாளர், உறுப்பு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள், துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கவுன்சிலில் மொத்தம் 28 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி, ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் தலைமை, உலகளாவிய நலன் பற்றிய உலகளாவிய பாராட்டு மற்றும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஆகியவற்றை கவுன்சில் வரவேற்றது.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “நாட்டில் ஒரு குழந்தை கூட சத்துணவின்றி இருக்கக் கூடாது. பள்ளி இடைநிற்றலைக் குறைப்பது நம் அனைவரின் பொறுப்பு. கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவிப்பது நாட்டின் 60 கோடிக்கும் மேற்பட்ட மக்களை செழிப்பான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்ல உதவும். அனைத்து உறுப்பு மாநிலங்களும் இயற்கை விவசாயத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில், இது நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.