அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள ஆட்டோமொபைல் தொழிலாளர் கூட்டமைப்பு (UAW) சார்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர்.
ஃபோர்டு மோட்டார் கம்பெனி, ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெல்லான்டிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பில் சுமார் 1 லட்சத்துக்கு ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அமெரிக்காவில் உற்பத்தியாகும் 50 சதவீத வாகனங்கள் இந்த மூன்று நிறுவனங்களில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் அமெரிக்க அதிபர் கலந்து கொண்டார். அமெரிக்க வரலாற்றிலேயே தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் அதிபர் என்ற பெருமையையும் ஜோ பைடன் தட்டிச் சென்றுள்ளார். அதிபர் தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் ஜோ பைடனின் இந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் தொழிலாளர் கூட்டமைப்பு (UAW) சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்ட பைடன், தொழிலாளர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.
போராட்டத்தில் பேசிய அவர், “தொழிலாளர்கள் தற்போது வாங்குவதை விட அதிக ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
பைடனுக்கு எதிராக தொடர்ந்து சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று மிச்சிகனில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பது குறிப்பிடத்தக்கது.