டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரவேற்பை பெற்ற ‘2018’ என்ற மலையாள திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான ‘2018’ அதிகாரபூர்வமாக தேர்வாகி உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு (The Film Federation of India) அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (The South Indian Film Chamber of Commerce) தேர்வுக்குழுவின் தலைவரான கிரீஷ் காசரவள்ளி பேசுகையில், “காலநிலை மாற்றம் தொடர்பான பொருத்தமான கதைக்கருவுடன், சமூகத்தின் வளர்ச்சியை புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘2018’ திரைப்படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளது” எனத் தெரிவித்தார். கிரீஷ் காசரவள்ளி தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் இந்தப் படத்தை அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
‘தி கேரளா ஸ்டோரி’, ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’, ‘மிஸ்டர் சாட்டர்ஜி விஎஸ் நார்வே’, ‘பாலகம்’ (தெலுங்கு), ‘ஆகஸ்ட் 16, 1947’, வால்வி (மராத்தி), பாப்லியோக் (மராத்தி) உள்ளிட்ட படங்கள் பரிந்துரைப் பட்டியில் இருந்த நிலையில் ‘2018’ திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பினர் தேர்வு செய்துள்ளனர். 95-ஆவது ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத்தி படமான ‘தி செல்லோ ஷோ’ திரைப்படம் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படம் தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் ரூ.200 கோடி வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து படத்தின் நாயகன் டோவினோ தாமஸ் கூறுகையில், ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுத் தேர்வாகத் 2018 தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மையிலேயே எங்கள் படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். ஒரு நடிகனாக இது எனக்கு பெருமையளிக்கும் தருணம் மட்டுமல்ல, இந்தத் படத்தில் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் செலுத்தி பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவிற்கும் இது சமர்ப்பணம். 2018 என்பது நம் காலத்தின் மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான கேரள மக்களின் நெகிழ்ச்சி மற்றும் அடக்க முடியாத மனப்பான்மையின் பிரதிபலிப்பாகும்.
இத்திரைப்படத்தின் மூலம், குழப்பம் மற்றும் அழிவுகளுக்கு மத்தியில், எப்போதும் நம்பிக்கையின் மினுமினுப்பு இருப்பதையும் அனைவர்க்கும் நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த நியமனம் எங்களின் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது, மேலும் இது எங்களை மட்டுமின்றி சர்வதேச பார்வையாளர்களிடமும் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.