குஜராத்தில் அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) தஹோட் பண்பலை ஒலிபரப்பு நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
குஜராத்தில் மாநிலத்தின் போடேலியில் நடந்த நிகழ்ச்சியில் 10 கிலோவாட் திறன் கொண்ட பண்பலை ஒலிபரப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
இந்த நிலையம் ரூ.11.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இது சுமார் 55 கி.மீ சுற்றளவில் உள்ள உள்ளூர் வாசிகளை சென்றடையும். இது பழங்குடி மாவட்டமான தஹோட்டின் சுமார் 75% பகுதியை உள்ளடக்கியது. மேலும், அலிராஜ்பூர் மற்றும் ஜாபுவா உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தின் அண்டை பழங்குடி மாவட்டங்களையும் இந்த அலைவரிசையின் ஒலிபரப்பு சென்றடையும். தஹோட் நிலையத்தின் மூலம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட நேயர்கள் உயர்தர பண்பலை ஒலிபரப்பு சேவைகளை பெறுவார்கள். இந்த வளர்ச்சி பிராந்தியத்தின் கலாச்சார மற்றும் தகவல் களஞ்சியத்தை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அது சேவை செய்யும் சமூகங்களுக்கு சிறந்த தகவல் தொடர்பு மற்றும் இணைப்பையும் எளிதாக்குகிறது.
இது தவிர, பூஜ், பாவ்நகர், துவாரகா, ரத்தன்பூர் மற்றும் தேசா உள்ளிட்ட முக்கிய இடங்களில் 39 கோடிக்கும் அதிகமான செலவில் பல்வேறு மின் திறன்களுடன் எஃப்.எம் அலைவரிசைகளை நிறுவும் பணியிலும் பிரசார் பாரதி ஈடுபட்டுள்ளது. இந்த திட்டங்கள் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்ட ஒலிபரப்பு உள்கட்டமைப்பு இணைப்பு மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டங்கள் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போது, மாநிலத்தின் பரப்பளவில் சுமார் 65% வரை எஃப்.எம் ஒலிபரப்பை அதிகரிக்கும் மற்றும் அதன் மக்கள் தொகையில் சுமார் 77% -ஐ சென்றைடைய உதவும். இந்த திட்டங்கள் பெருமளவில் நேயர்களுக்கு தரமான வானொலி பொழுதுபோக்கு மற்றும் தகவல்களை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெறும்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஆகாஷ்வாணியை வலுப்படுத்தும் வகையில், 100 வாட் திறன் கொண்ட 91 பண்பலை அலைவரிசைகளை தொடங்கி வைத்தார். தற்போதைய நிலவரப்படி, ஆகாஷ்வாணி நாட்டில் மொத்தம் 613 செயல்பாட்டு பண்பலை அலைவரிசைகளைக் கொண்டுள்ளது. இது நாட்டின் பரப்பளவில் சுமார் 59.2% அளவிற்கு பண்பலை வானொலி சேவைகளை வழங்குகிறது. மக்கள் தொகையில் சுமார் 73.5% சேவை செய்கிறது. கூடுதலாக, நடுத்தர அலையில் செயல்படும் ஆகாஷ்வாணி ஏஎம் கட்டமைப்பு ஏற்கனவே நாட்டின் 88% பரப்பளவையும் 95% மக்கள் தொகையையும் உள்ளடக்கியது.
ஆகாஷ்வாணி எஃப்.எம் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான நேயர்களுக்கு உயர்தர மற்றும் மாறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. வளமான வரலாறு மற்றும் தொலைநோக்கு அணுகுமுறையுடன், ஆகாஷ்வாணி எஃப்.எம் பொழுதுபோக்கு, தகவல் மற்றும் கலாச்சார செழுமையின் நம்பகமான ஆதாரமாக தொடர்கிறது.