தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய, நீர்மட்டம் 38.10 அடியாக உள்ளது.
குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக, இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,231 கன அடியிலிருந்து 7,070 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 38.02 அடியிலிருந்து இன்று காலை 38.10 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.13 டிஎம்சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.