2023-ஆம் ஆண்டில் இந்தியா 1 மில்லியனுக்கு அதிகமான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. அதில், 40 சதவீதத்துக்கும் அதிகமான வாகனங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை
இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகன் இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, 2023 ஆம் ஆண்டில் நாட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, செப்டம்பர் 20-ந் தேதி வரை, 10 இலட்சத்து 44 ஆயிரத்து 600 மின்சார வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 10 இலட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், அந்த சாதனையை இந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தின் இடையில் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பது தெளிவாகிறது.
நாட்டில் விற்கப்படும் மின் வாகனங்களில், 40 சதவீதத்திற்கும் அதிகமானவை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
தமிழகம் எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல்கள், ஜவுளிகள் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி மட்டுமின்றி, மின்சார வாகன உற்பத்தியிலும் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்களில் 4 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானவைத் தமிழகத்தில் உற்பத்தியாளர்கள் விற்பனை செய்துள்ளனர்.
தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களை மின்சார வாகனங்கள் உற்பத்தி மையங்களாக உருவாக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நகரங்கள் ஏற்கெனவே, வலுவான போட்டியாளர்களாக உள்ளன. தமிழகத்தின் உள்கட்டமைப்பு, தளவாட அமைப்புகள், திறமையான மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள், ஆட்டோ உதிரிப்பாக உற்பத்தி அமைப்புகள் உள்ளன.
2025-ஆம் ஆண்டுக்குள், மின்சார வாகன உற்பத்தியில், 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்கம்.