மத்திய அரசு டி.சி.எஸ். கட்டணங்களை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அதாவது, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்தால், அக்டோபர் 1 முதல் 20 சதவீதம் டி.சி.எஸ். செலுத்த வேண்டும். அதற்குக் குறைவாகச் செலவு செய்தால் 5 சதவீதம் டி.சி.எஸ். செலுத்தினால் போதுமானது.
அடுத்து, வெளிநாட்டுக் கல்விக்காகக் கடன் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு மேல் பெற்றால் 0.5 சதவீதம் டி.சி.எஸ். விதிக்கப்படும். மேலும், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகளுக்கு 5 சதவீதமாக டி.சி.எஸ். வசூலிக்கப்படும்.
டெல்லியில் வரும் 1 -ம் தேதி முதல் டீசல், ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை தடுக்கும் வகையில், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகள் உள்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்தப்பட உள்ளது.
அக்டோபர் 1-ம் தேதி முதல் பத்திரப் பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும், ஆவணமாக இணைக்க வேண்டும் எனப் பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
புகழ் பெற்ற பழனி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல அக்டோபர் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன், வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை, அதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து விட்டு, மீண்டும் பெற்றுச் செல்லலாம்.
பிறப்பு மற்றும் இறப்பு திருத்தச் சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரஉள்ளது. அதன்படி, அரசு வேலை மற்றும் அனைத்து சேவைகளுக்கு ஒரே ஆவணமாகப் பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்த முடியும்.
அதாவது, அக்டோபர் 1-ம் தேதி முதல் மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், நியாயவிலைக்கடை கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவனச் சேர்க்கை, திருமணப் பதிவு, அரசுப் பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஆவணமாகப் பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்த முடியும். எனவே, அரசின் புதிய சட்ட திட்டங்களை நினைவில் கொண்டால், எளிய வழியில் பயன்பெற முடியும்.