அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களின் எல்லையில் இரு மாநில மக்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. வில், அம்பு மற்றும் கவண்களுடன் மோதிக்கொண்டனர். எனினும், உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 1972-ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களும் சுமார் 884 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால், மாநிலங்கள் பிரிக்கப்பட்டது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. 12 இடங்களில் நடந்து வரும் மோதலில் இரு மாநில மக்களுக்கும் மோதிக் கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் முக்ரோ பகுதியில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த கிராம மக்களுக்கும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, மோதலை தடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த 5 கிராம மக்கள் மற்றும் அஸ்ஸாம் வனத்துறையைச் சேர்ந்த காவலர் என மொத்தம் 6 பேர் உயரிழந்தனர்.
இவ்வாறு இரு மாநிலங்களுக்கு இடையே எல்லையில் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருவதால், இரு மாநில முதல்வர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடந்த பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசின் சமரசத்தால் இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த மாதம் இரு மாநில முதல்வர்கள் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில்தான், மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்துக்கும், அஸ்ஸாம் மாநிலத்தின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்துக்கும் இடையேயான எல்லையில் அமைந்திருக்கும் லபங்காப் கிராமத்தில் நேற்று இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, இருதரப்பினரும் வில், அம்பு மற்றும் கவண்களை பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். எனினும், இந்த மோதலில் உயிர்ச்சேதம் இல்லை.
இச்சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இது தொடர்பான காணொளிக் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து, இரு மாநில எல்லைக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றனர். மோதல் நடந்த இடத்தில் கிராம மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் வகையில் இரு மாநில காவல்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால், இன்று காலை பதற்றம் தணிந்து நிலைமை அமைதியாக மாறியிருக்கிறது.