காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், மாவட்ட தலைவர் நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாக, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவராக இதுவரை இருந்து வந்தவர் சத்தியமூர்த்தி. இந்த நிலையில், அந்த பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு, சஞ்சய் காந்தி என்பவரை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு, அம்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் பின்னணியில் பா.சிதம்பரமும், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் உள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால், கட்சியின் விதிப்படி, சம்பந்தப்பட்ட நபர் மாவட்டக் குழு உறுப்பினராக இருக்க வேண்டும். அடுத்து, பூத் கமிட்டி உறுப்பினராகவும் இருக்க வேண்டும். ஆனால், இதில் எதிலும் இல்லாத சஞ்சய் காந்தியை நியமனம் செய்துள்ளனர். இது கட்சி விதிமுறைகளுக்கு முரணானது.
எனவே, முறையாகத் தேர்தல் நடத்தி மாவட்டத் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் நிர்வாகி கே.எஸ். அழகிரியிடம் புகார் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.