புரட்டாசி பௌர்ணமி தினமான இன்று சிவனையும், பார்வதியையும் மனம் உருக வேண்டினால், அவர்களது பரிபூரண அருள் கிடைக்கும்.
மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு எனத் தனிச்சிறப்பு உண்டு. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் என்பதும், செல்வ வளம் பெருகும் என்பதும் ஐதீகம். இதனால் பொது மக்கள் அனைவரும் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்கின்றனர்.
குறிப்பாக, இந்த நாளில் சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் பக்தர்கள் பலரும் கிரிவலம் செல்வது வழக்கம்.
ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயாணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தில் வரும் நடுநிசியாகும். இதனால், இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகையின் அருள் அதிகரிக்கும்.
புரட்டாசி பௌர்ணமி அன்று தேவர்கள் அன்னையின் திருநாமத்தை ஜெபித்தபடி, தவமும், தியானமும் செய்து அன்னையின் ஆசி பெற்றனர். இதனால், பௌர்ணமி இரவில் தியானம், தவம், பிராணாயாம செய்தால் எதிர்காலத்தை உணரும் இறைசக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, புரட்டாசி பௌர்ணமி தினத்தில் சிவபெருமானை வழிபட்டால், சிவன், பார்வதியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
மேலும், புரட்டாசி மாத பௌர்ணமியான இன்று (28-ம் தேதி) மாலை 6.46 மணிக்கு பௌர்ணமி தொடங்கி, நாளை (29-ம் தேதி) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில், சிவாலயங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கருதப்படுகிறது.