இந்தியாவில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் நிலநடுக்க எச்சரிக்கை சேவையைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பு அதிர்வுகளைக் கண்டறிய ஆண்ட்ராய்டு சாதனங்களில் சிறிய நில அதிர்வு சென்சார்களைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கெனவே, பல நாடுகளில் ஆண்ட்ராய்டு சாதனங்களின் மூலம் நிலநடுக்க எச்சரிக்கை வழங்கும் சேவை அமலில் உள்ளது. தற்போது, இந்த சேவை இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய நில அதிர்வு மையம் உதவியுடன், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்திய ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும்போது முன்னறிவிப்பு எச்சரிக்கையைப் பெறுவா்.
ஒரு ஆண்ட்ராய்டு மின்னேற்றியில் இணைக்கப்பட்டிருந்தால், அது சென்சாரைப் பயன்படுத்தி, நிலநடுக்கத்தின் தொடக்கநிலையைக் கண்டறியும்.
பல ஆண்ட்ராய்டுகள் ஒரே நேரத்தில் நிலநடுக்க அதிர்வுகளைக் கண்டறிந்தால், இந்தத் தகவலைப் பயன்படுத்தி நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்றும், நிலநடுக்கத்தின் மையப்பகுதி மற்றும் அளவு போன்றவையும் குறிப்பிடப்படும். பின்னா், இதுகுறித்து அப்பகுதியிலுள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும். தற்போது, இந்த சேவை, ஆண்ட்ராய்டு 5 மற்றும் அதற்கு மேற்பட்ட மொபைல் போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
புயல் , வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களைப் பற்றிய பயனுள்ள பாதுகாப்புத் தகவல்களைக் கூகுள் தேடுபொறி, கூகுள் மேப் மூலம் பயனர்களுக்கு வழங்குவதற்காகத் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இந்த சேவை அமைப்பை இந்தியாவுக்குக் கொண்டு வர, தேசிய நில அதிர்வு மையத்துடன் இணைந்து எங்கள் தொடா்பை மேலும் அதிகரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.