திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றதைத் தொடர்ந்து, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமேட்டு நடைப்பாதையில் வல்லுனர் குழு ஆய்வு செய்தது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் திருமலை ஏழுமலையான் கோவில் மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலாத் தலமாகத் திகழ்ந்து வருகிறது. தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும், இந்தியாவைப் பொறுத்தவரை கோடி கோடியாகப் பணம் கொட்டும் கோவில் என்றால் அது திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில்தான்.
இந்த நிலையில், திருப்பதியிலுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. சமீபத்தில், திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில் சென்ற 6 வயது சிறுமியை, சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இதனால், பக்தர்கள் அலிபிரி நடைப்பாதையில் பயணம் மேற்கொள்ள அச்சமடைந்தனர். தவிர, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்குச் செல்வதற்கும் தயக்கமடைந்தனர்.
இதையடுத்து, அலிபிரி நடைப்பாதையில் ஆந்திர வனத்துறையினர் இரும்பு கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்தனர். இதனால் ஏழுமலையான் பக்தர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், சிறுத்தைகள் நடமாட்டம் சி.சி.டி.வி. கேமராவில் தொடர்ந்து பதிவானது. இதைத் தொடர்ந்து, கூண்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டதில், அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இது பக்தர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.
ஆகவே, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மேட்டு நடைப்பாதையில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்தது. விசாகப்பட்டினம் வன விலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ரமேஷ், அசுதேஷ் சிங், சாகன் பிரசாத் மகாஜன் ஆகியோர் அலிபுரி நடைப்பாதையில் ஆய்வு செய்தனர். அப்போது, நடைப்பாதையில் செல்லும் பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
குறிப்பாக, சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அருகே ஆய்வு மேற்கொண்ட குழுவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடைப்பாதையில் தடுப்பு வேலி அமைப்பதால் நிரந்தரத் தீர்வு காண முடியாது. மற்ற வழிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். வனவிலங்குகள் நடைப்பாதைக்கு வருவதை பக்தர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த முடியும்” என்றனர். பின்னர், இதுகுறித்தும் ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.