சென்னையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெயரைக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக, ரூ.7.40 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மா.சுப்பிரமணியன்.
இந்த நிலையில், லயோலா ரோஸாரியோ சர்ச்சில் மற்றும் மகேஸ்வரி மற்றும் அந்தோணி ராஜ் ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதில், காஞ்சிபுரம் பிரேம்குமாருக்கு கிராம அலுவலர் வேலையும், அவரது சகோதரிக்கு மருத்துவமனை மேற்பார்வையாளர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி நம்பவைத்து, அவர்களிடம் ரூ.7.40 லட்சம் வாங்கியுள்ளனர்.
சொன்னபடி அரசு வேலையும் வாங்கித்தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அறிந்த, காஞ்சிபுரம் பிரேம்குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், விசாரணை நடத்திய காவல்துறையினர், ரூ. 7.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட லயோலா ரோஸாரியோ சர்ச்சில் (31) மற்றும் மகேஸ்வரி ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவான அந்தோணி ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.
அமைச்சரை தெரியாமல் எப்படி அவர் பெயரைப் பயன்படுத்தி, மோசடி செய்ய முடிந்தது? அல்லது கைது செய்யப்பட்டவர்கள் ஆளும் கட்சியில் பதவியில் உள்ளார்களா? அல்லது எந்த அடிப்படையில் அமைச்சர் பெயரைச் சொல்லி பல லட்சம் வாங்கினார்கள்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
ஏற்கனவே, பலருக்கும் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரிலும், சட்ட விரோத பண மாற்ற வழக்கிலும் சிக்கியுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.