உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்டது. நாளை மறுநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
இதனிடையே உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் மாற்றங்கள் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதனால் இந்திய அணியில் காயமடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக ஆப் ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அக்சர் படேலின் காயம் குறித்த முழுமையான விளக்கம் இன்று அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், உலகக்கோப்பை அணியில் மாற்றம் இருக்கிறதா, ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக விரைவில் பதில் அளிக்கப்படும். தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உடன் என்சிஏ நிர்வாகிகள் நல்ல தொடர்பை கொண்டுள்ளனர்.
அதனால் அந்த விவகாரம் குறித்து பேச முடியாது. ஒருவேளை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் இருந்தால் நிச்சயம் அறிவிக்கப்படும். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை சில வீரர்களுக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சில வீரர்கள் சொந்த காரணங்களுக்காக வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா உள்ளிட்டோர் ஆசிய போட்டிகளுக்கான சீனா புறப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி போட்டியில் 13 வீரர்களே இருந்தனர். இந்திய அணியை பொறுத்தவரை இன்று இரவு அல்லது நாளை காலை கவுகாத்தியில் கூடவுள்ளனர். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. அதற்குள் இந்திய அணியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.