திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் தற்பொழுது, 34.25 அடியை எட்டியுள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி, ஏரியில் இருந்து 3,210 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.
உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.
கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால், மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றன. இந்நிலையில், தரைப்பாலம் அருகே புதியதாகக் கட்டி வரும் மேம்பாலம் தற்காலிகப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது.
இதேபோல், ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பெரியபாளையம் அருகே, அஞ்சாத்தம்மன் கோவில் புதுப்பாளையம் தரைப் பாலம் நீரில் மூழ்கியது. ஆனாலும், ஆபத்தை உணராமல் அதில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
மேலும், ஆரணி மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பகுதியில், மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.