பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனிசாமி கூறியிருந்த நிலையில், புனிதமான திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரும் வெற்றி பெறும் என்று பா.ஜ.க.வின் தமிழக முன்னாள் மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகித்து வந்தது. 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருந்தது. இந்த சூழலில், இரு கட்சிகளுக்கும் இடையே திடீரென மோதல் போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு, பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனிசாமி, “2024-ம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம். அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒரு போதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பதே கிடையாது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு பதிலளிக்கும் வகையில், பா.ஜ.க. தமிழக முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “புனிதமான திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரும் வெற்றி பெறும். மேலும், தமிழகத்தில் பா.ஜ.க. பெரிய அளவில் வளர்ச்சி பெரும்” என்று கூறியிருக்கிறார்.