சீனாவுக்கு பதிலடி கொடுக்க தைவானும் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல் முறையாக உள்நாட்டிலேயே நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்திருக்கிறது.
சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும், தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், அந்நாட்டை எப்படியாவது மீண்டும் தங்களுடன் இணைத்துவிட வேண்டும் என்று சீனா துடித்து வருகிறது. இதற்காக, தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், சீனா இராஜதந்திர ரீதியாகவும் தைவானை தனிப்படுத்தி இருக்கிறது. அதேசமயம், சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறியிருக்கிறது. எனவே, தைவான் நாட்டின் தற்காப்புக்கான செலவை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தற்பாதுகாப்புக்காக 2024-ம் ஆண்டுக்கான நிதியாக 19 பில்லியன் டாலரை ஒதுக்கி இருக்கிறது.
இந்தத் தொகை, தனது நெருங்கிய பங்காளியான அமெரிக்காவிடம் இருந்து இராணுவக் கருவிகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது. அதேசமயம், நீர்மூழ்கிக் கப்பலை பெறுவதில் தைவானுக்கு சில இடையூறுகள் இருந்தன. எனவே, சொந்த நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்க முடிவு செய்தது.
இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு 8 நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்றை தொடங்கியது. இத்திட்டத்தின்படி, முதன் முறையாக “ஹாய் குன்” என்கிற நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்திருக்கிறது. இக்கப்பலின் அறிமுக விழா காஹ்சியுங் நகரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் சாய் இங்வென் கலந்துகொண்டு பேசுகையில், “தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாளாகும். முன்பெல்லாம் உள்ளூரில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இயலாது என்று கூறப்பட்டது. இன்றோ அனைவரும் வியக்கும் வகையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நாமே வடிவமைத்தது மட்டுமின்றி, தயாரித்தும் இருக்கிறோம். நாம் சாதித்துவிட்டோம்” என்று கூறினார்.
இந்த நீர்மூழ்கி போர்க்கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இது 3,000 டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒரு சில சோதனைகளுக்கு பிறகு இக்கப்பல் அடுத்தாண்டு கடற்படையில் இணைக்கப்படும் என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.