தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெ.தாதம்பட்டி அருகே உள்ளது வாச்சாத்தி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன வீரப்பனுக்கு ஆதரவாக, மரங்களை வெட்டிக் கடத்துவதாகத் தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், 1992 -ம் ஆண்டு ஜூன் 20 -ம் தேதி அந்த கிராமத்தையும் சுற்றி வளைத்து காவல்துறை, வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பல மணி நேரம் சோதனை நடத்தி 133 பேரை கைது செய்தனர். இதில், 90 பேர் பெண்கள், 28 பேர் குழந்தைகள், 15 பேர் ஆண்கள்.
இந்நிலையில், கூட்டுக்குழுவில் இடம் பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. மேலும், கிராம மக்களை அடித்து உதைத்தும், குடிசைகளைத் தகர்த்தும், வீட்டிலிருந்த பொருட்களை நாசம் செய்தனர் என குற்றம் சாட்டப்பட்டது.
தமிழகக் காவல்துறை இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள், வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் என 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2011-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 54 பேர் மரணம் அடைந்த நிலையில், மற்ற 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இதில், 126 வனத்துறையினர், 84 காவல்துறையினர், 5 வருவாய்த் துறையினர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 12 வனத்துறையினருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழிலுக்கு உதவ வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அன்றைய தருமபுரி ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வன அதிகாரி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், குற்றவாளிகளின் மேல் முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்தார்.