கனடாவில் காலிஸ்தான் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருந்தார். இந்த சூழலில், நாஜி படை வீரரை கௌரவப்படுத்திய விவகாரத்தில், கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜர், கனடா நாட்டில் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு இந்தியா மறுப்புத் தெரிவித்த போதிலும், அந்நாட்டுக்கான தூதரை வெளியேற்றியது கனடா. பதிலுக்கு இந்தியாவும் அந்நாட்டின் தூதரக உயர் அதிகாரியை வெளியேற்றி பதிலடி கொடுத்ததோடு, கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், மற்றொரு சர்ச்சையில் வாண்டடாகப் போய் வண்டியில் ஏறி இருக்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அதாவது, உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி, கடந்த வாரம் கனடா நாட்டுக்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டார். அப்போது, அங்கிருந்த உக்ரைன் நாட்டின் முன்னாள் இராணுவ வீரர் யாரோஸ்லாவ் ஹன்கா என்பவரை கனடா சபாநாயகர் அந்தோணி ரோட்டா நாடாளுமன்றத்தில் கௌரவித்தார். அதாவது, அவர் உக்ரைன் விடுதலைக்காகப் பாடுபட்டதாகக் கூறி, ஒட்டுமொத்த கனடா நாடாளுமன்றமும் எழுந்து நின்று கௌரவித்தது.
ஆனால், உண்மை என்னவென்றால் இராணுவ வீரர் யாரோஸ்லாவ் ஹன்கா போலந்து நாட்டைச் சேர்ந்த உக்ரைனியர் என்பதும், ஜெர்மனியின் நாஜி படையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, 2ி-ம் உலகப் போரின்போது, ஹிட்லரின் நாஜி படைகளில் ஒன்றான வாஃபென் எஸ்.எஸ். பிரிவில் பணியாற்றியவர். அப்போது, நாஜி படையினர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்ததை உலகம் மறக்காது. அப்படி இருக்க, நாஜி படை வீரரை கௌரவித்த கனடா நாட்டுக்கு உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கனடா நாட்டை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
இதன் பிறகு, உண்மை நிலவரம் தெரியவந்ததும், அவரது பின்னணி குறித்துத் தெரியாது என்றும், அவரை கௌரவித்தது தனது தனிப்பட்ட முடிவு என்றும் கூறி, கனடா நாடாளுமன்ற சபாநாயகர் அந்தோணி ரோட்டா மன்னிப்புக் கேட்டார். இந்த சூழலில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசுகையில், “இந்தச் சபையில் உள்ள அனைவர் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், நடந்த சம்பவத்திற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைன் தூதர்கள் ஆகியோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஒருவரின் பின்னணி குறித்துத் தெரியாமல் அவரை கௌரவித்தது பயங்கரமான தவறு. இது நாஜி ஆட்சியின் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்திருக்கும் என்பதை உணர முடிகிறது. இதற்காக நான் அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.