சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். பிறகு காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
அமலாக்கத்துறையினர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்தனர். மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 2 மாதங்களாகும் நிலையில், அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. 6-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது.
இந்நிலையில், இன்று புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதாவது அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் செந்தில் பாலாஜிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.