பாகிஸ்தானில் மசூதி அருகே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 54 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங்கில் முஹம்மது நபியின் பிறந்தநாளை கொண்டாடும் ஊர்வலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 54பேர் கொல்லப்பட்டனர்.
இதில், 54க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும், தற்கொலைப் படை தாக்குதலினால் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த சம்பவத்தில், மஸ்டங் நகர துணை போலீஸ் கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து அறிந்த பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புபணிகளில் ஈடுப்பட்டனர்.
மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்கள் மீட்டனர். மேலும், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போதைய நிலவரப்படி சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்த குழந்தைகள் ரத்தக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் ஏற்கனவே அரசியல் சூழல் சரியில்லாத சூழலில், செப்டம்பர் மாதம் நடைபெறும் 2வது பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். தற்போது நடைபெற்றுள்ள குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பதற்றத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.