தமிழகத்தில் வெறி நாய் கடிக்கு இந்த ஆண்டு மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வெறி நாய் கடியால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் என்னும் வைரசால் பாதிக்கப்பட்ட நாய் ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, வவ்வால் உள்ளிட்டவை மனிதனைக் கடிக்கும் போது, அதன் மூலம் அந்த நோய்த் தொற்று பரவுகிறது.
நமது நாட்டைப் பொறுத்தவரை இந்த நோய் பெரும்பாலும் நாய்கள் மூலமாகவே மனிதர்களைத் தாக்குவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வெறி நாய் கடிக்கு இந்த ஆண்டு மட்டும் 13 பேர் பலியாகி உள்ளனர்.
எனவே, வெறிநாய் கடித்துவிட்டால் அதன் பாதிப்பைக் குணப்படுத்துவது என்பது மிகவும் சிரமம். வெறிநாய் கடித்தால் மரணம் நிச்சயம். இதனால், வளர்க்கும் ஒவ்வொருவரும் தாங்கள் வளர்த்தும் வரும் செல்லப் பிராணிகளுக்கு ரேப்பிஸ் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். இதன் மூலமே ரேபிஸ் நோயைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், வெறி நாய் கடிக்குத் தினமும் அரசு மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், ஒரு சில அரசு மருத்துவமனைகளில் நாய் கடிக்கு மருந்து இல்லை என்று நோயாளிகளை அலைக்கழிக்கும் சம்பவம் நடைபெற்றுவருவதாகத் தொடர் புகார் எழுந்துள்ளது.
மேலும், வெறி நாய் கடிக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டரின் நினைவாக செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறி நோய் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், 2007-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.