அக்டோபர் 15 -ம் தேதி வரை விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு செய்வது தொடர்பாகக் கர்நாடகா அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது.
தமிழகத்திற்குத் தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18 -ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குக் கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. அப்போது, கர்நாடக அணைகளில் 50 டிஎம்சி நீர் இருப்பதால் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், 12,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு கர்நாடக அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு அக்டோபர் 15 -ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.