கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், மனிதனாகவும் என்னுள் சில மாற்றங்கள் நடந்திருக்கிறது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. 2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால், இந்திய அணி நிச்சயம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக பார்க்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகிய இருவர் மட்டுமே தற்போதைய உலகக்கோப்பை அணியில் இருக்கின்றனர். இதனால் விராட் கோலிக்காக உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதனையொட்டி விராட் கோலியின் பிரத்யேக பேட்டி ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விராட் கோலி, ” 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின் என் வாழ்க்கை கடினமானதாக மாறியது. அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து தற்போது மிகப்பெரிய மாற்றத்தை உணர்கிறேன். வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், மனிதனாகவும் மாறி இருக்கிறேன். அதனால் சதம் விளாசிய பின்னரோ, விக்கெட் வீழ்த்திய பின்னரோ கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் கொண்டாடியதை எல்லாம் கடந்த காலமாக பார்க்கிறேன்.
நான் கடினமான காலகட்டத்தில் இருந்த போது எனக்கு ஏராளமான அறிவுரை வந்தது. இரசிகர்கள் பலரும் நான் இதனை தவறாக செய்கிறேன், அதனை தவறாக செய்கிறேன் என்று சொல்லி கொண்டே இருந்தார்கள். ஆனால் நான் மகிழ்ச்சியாக களத்தில் செயல்பட்ட வீடியோக்களை பார்த்தேன். அதில் டைமிங், அணுகுமுறை எல்லாமே சரியாக இருந்தது. இதனால் எனக்குள் என்ன ஓடுகிறது என்பதை யாரிடமும் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.