சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நிலை நிறுத்துவதற்காக, மேலும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டரான ‘பிரசந்த்’தை வாங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரக ஹெலிகாப்டர்கள், அதிக உயரத்தில் இருந்து தரையிறங்கக் கூடிய உலகின் ஒரே இலகுரக போர் ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை, சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகள் எப்போதுமே பதற்றமானதாக இருந்து வருகிறது. ஆகவே, இரு நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் பாதுகாப்பு ரோந்துகள் மற்றும் தீவிரவாத இலக்குகளை தாக்கி அழிப்பதற்காக, “பிரசந்த்” ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த ஹெலிகாப்டர் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டராகும்.
அதன்படி, முதற்கட்டமாக 15 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் நிலையில், மேலும் 156 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதில், 66 ஹெலிகாப்டர்கள் விமானப்படையிலும், 90 ஹெலிகாப்டர்கள் இராணுவத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த “பிரசந்த்” ஹெலிகாப்டர்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் 5,000 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே இறங்கவும், அதே உயரத்தில் அனைத்து வகையான வானிலை சூழல்களில் பறக்கும் சக்தி படைத்த உலகின் ஒரே தாக்குதல் ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து நிலத்திற்கு வீசப்படக்கூடிய துர்வாஸ்திரா ஏவுகணைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தீவிரவாதிகள் நிலத்திற்கு அடியில் பதுங்கியிருந்தாலும், அவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. எனவே, இந்த ஹெலிகாப்டர்களை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.