பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தை, அஜா்பைஜான் மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசித்து வந்த 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
சோவியத் யூனியனின் ஒருங்கிணைந்த பகுதிகள், 1991-ல் பல்வேறு நாடுகளாக உடைந்தன. இதில், அஜர்பைஜான், அர்மேனியா ஆகிய நாடுகளும் அடங்கும்.
அர்மேனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள, நகோா்னோ-கராபாக் பிராந்தியம் தொடா்பாக, இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.
அர்மேனியப் பழங்குடியினர் அதிகளவில் உள்ள நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தை அஜர்பைஜானின் ஒருங்கிணைந்த பகுதியாக சர்வதேச நாடுகள் அங்கீகரித்தன.
இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, அர்மேனியப் படையினரின் ஆதரவுடன், அந்தப் பகுதியைப் பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதைத்தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் அர்மேனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அஜா்பைஜான் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாத பிரிவினைவாதிகள், அஜர்பைஜான் இராணுவத்திடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து, நகோா்னோ-கராபாக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அஜா்பைஜான் அறிவித்தது.
நகோா்னா-கராபாக் குடியரசை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி கலைக்க அதன் அதிபா் சாம்வெல் ஷாராமான்யன் அரசாணைப் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், நகோா்னா-கராபாக் பிராந்தியத்தில் வசித்து வந்த அர்மேரியர்கள், அஜா்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதுவரை, 84 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள், அர்மேனியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.