ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸில் இந்திய அணிக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சில குறிப்பிட்ட பிரிவுகளிலையே பதக்கங்களை வென்று வந்த நிலையில் தற்போது மற்றொருப் பிரிவில் தங்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டில் இன்று டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே பங்குபெற்றன. இவர்களுக்கு எதிராக சீன அணியின் லியாங் மற்றும் ஹுவாங் விளையாடினர்.
இந்தப் போட்டியின் முதல் சுற்றில் லியாங் மற்றும் ஹுவாங் சிறப்பாக விளையாடி இந்திய அணியை 2-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். இரண்டாம் சுற்றில் இந்திய அணியின் ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா சீன அணியை 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.
இரண்டு அணிகளும் ஒவ்வொரு சுற்றில் வெற்றிப் பெற்றிருந்த நிலையில் மூன்றாவது சுற்றே வெற்றியை தீர்மானிக்கும் சுற்றாக இருந்தது. இதில் யார் தங்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, சீனாவை 10-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் பிரிவில் இதுவே இந்தியாவின் முதல் தங்கமாகும். இதன் மூலம் இந்தியா 9 தங்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.