காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வரும் அக்டோபர் மாதம் 2 -ம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய விழாக்களில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் நேதாஜியின் இந்தியத் தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில், தமிழக ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து அளிப்பது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதியைச் சேர்ந்த, இந்தியத் தேசிய ராணுவ வீரராக பணியாற்றிய ஆறுமுக தேவர் என்பவருக்கு, சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முறையான அழைப்புக் கடிதம் தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து ஆறுமுக தேவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆறுமுக தேவரைப் போன்று சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் ஆகியோருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளது.
மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நற்செயலால் சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.