சத்தீஸ்கர் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். காங்கிரஸ்கட்சியின் அராஜகங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆகவே, இத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் பா.ஜ.க. தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதை முன்னிட்டு, மாநிலத்தில் பரிவர்தன் யாத்திரைகள் தொடங்கப்பட்டன.
முதல் யாத்திரை சத்தீஸ்கரின் தெற்குப் பகுதியில் உள்ள தண்டேவாடாவில் இருந்து செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கியது. 2-வது யாத்திரை செப்டம்பர் 15-ம் தேதி வடக்கில் ஜஷ்பூரில் இருந்து தொடங்கியது. முதல் பரிவர்தன் யாத்திரை தண்டேவாடாவிலிருந்து பிலாஸ்பூர் வரை 16 நாட்களில் 1,728 கி.மீ. தூரம் பயணித்தது. இந்த யாத்திரையின்போது 45-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள், 32 வரவேற்புக் கூட்டங்கள் மற்றும் சாலைப் பேரணி ஆகியவை நடைபெற்றன.
2-வது யாத்திரை 12 நாட்களில் 1,261 கி.மீ. தூரத்தை கடந்து, 2 கோட்டங்களில் 14 மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்றத் தொகுதிகளில் வலம் வந்தது. இந்த யாத்திரையின்போது 39-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களும், 53 வரவேற்பு கூட்டங்களும் நடைபெற்றன. இந்த யாத்திரை நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிலாஸ்பூரில் பரிவர்தன் மகா சங்கல்ப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களை எதிர்த்து நிற்க மக்கள் உறுதி செய்து விட்டார்கள். மாற்றத்திற்கு வாக்களிக்கத் தயாராகி விட்டார்கள். மக்கள் மத்தியில் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கிற விருப்பம் வெளிப்படுகிறது. காங்கிரஸ் அரசு தங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை சத்தீஸ்கர் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால், உங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம் என்பது எனது உத்தரவாதம். சத்தீஸ்கரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் உங்கள் கனவுகள் நனவாகும். மத்திய அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, இங்குள்ள காங்கிரஸ் அரசு அனைத்து முயற்சிகளையும் சிதைக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்றிருக்கிறது. சாலை, ரயில், மின்சாரம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களாக இருக்கட்டும், நிதி வழங்குவதில் நாங்கள் மாநிலத்தை விட்டுக் கொடுக்கவில்லை. பொது வாழ்க்கையில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன.
மத்திய அரசு மாநிலத்திற்கு எந்த அநீதியும் இழைக்காது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. எனினும், இத்திட்டங்கள் தாமதமாகி விட்டன அல்லது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன” என்றார்.
முன்னதாக, பிலாஸ்பூர் வந்த பிரதமர் மோடி ரோடு ஷோவின்போது, பாரம்பரிய உடையணிந்த பெண்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கான்வாய் பயணித்த சாலையின் இருபுறமும் வரிசையாக நின்ற உள்ளூர்வாசிகளின் பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியது.