கடந்த 2 மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டி இருக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், சர்கேஜ் வார்டிலுள்ள ஒகாஃப் ஏரியின் சீரமைப்புப் பணிக்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அமித்ஷா, “நிலவில் மூவர்ணக் கொடியை ஏற்றியதன் மூலம், இந்தியாவும், உலகமும் தங்கள் திறமையை இந்த உலகுக்குக் காட்டி இருக்கின்றன. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தொகுதி ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதின் மூலம், இந்தியா ஒரு மாபெரும் உத்வேகத்தை பெற்றிருக்கிறது. இந்த வரலாற்று சாதனையை அடைந்த முதல் நாடு என்கிற பெருமையை பெற்றிருக்கிறது.
மேலும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரயான்-2 விண்கலம் விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. புதிய நாடாளுமன்றம், சந்திரயான்-3, ஜி20, நாரி சக்தி சட்டம் ஆகிய 4 வேலைகளையும் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாத கால இடைவெளியில் செய்து முடித்திருக்கிறார். இது இதுவரை யாராலும் செய்யப்படவில்லை.
மேலும், விநாயக சதுர்த்தி தினத்தன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தனது தலைமையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் நிறைவேற்றினார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சட்டத்தை செப்டம்பர் 21-ம் தேதி நாடாளுமன்றம் நிறைவேற்றியது” என்றார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் மக்களவையில் உள்ள 454 உறுப்பினர்களில் 2 பேர் தவிர மற்ற அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல, மாநிலங்களவையில் மொத்தமுள்ள 214 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, தனது மக்களவைத் தொகுதியான குஜராத்தின் காந்திநகரில் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். காந்திநகரின் பாலாஜில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தையும் உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இது தவிர, காந்திநகரின் பலாஜ் என்ற இடத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.