கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையைவிட, கடந்த 5 ஆண்டுகளில் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலத்திற்குச் சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த வகையில், தனது சொந்தத் தொகுதியான காந்திநகரில் தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அமித்ஷா, “தேசிய மருந்துக் கல்வி நிறுவனத்தின் குறிக்கோள் என்பது மருத்துவ அறிவியல் துறையில் ஆராய்ச்சியாக இருக்க வேண்டும்.
உலகின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக மாற வேண்டும் என்ற குறிக்கோளுடன் முன்னோக்கிச் செல்லுங்கள். ஆராய்ச்சித் துறையில் இந்தியா வளர்ச்சியடையும் வரை, மருந்து உற்பத்தித் துறையில் நாம் வலுவாக நிற்க முடியாது. பிரதமர் மோடியின் ஆட்சியில், பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையைவிட கடந்த 5 ஆண்டுகளில் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. பா.ஜ.க. அரசு சுகாதாரத் துறையில் முழுமையான கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.