காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 21 ஏரிகள் நிரம்பியுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடையிடையே பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஏரிகள் நிரம்பி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 201 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல், குன்றத்தூரில் 166 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 179 மில்லி மீட்டர் மழையும், செம்பரம்பாக்கத்தில் 112 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த பகுதிகளில் சராசரியாக இதுவரை 164 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போது வரை மாவட்டத்தின் சராசரி மழை அளவு 614 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
இதனால், செய்யாற்றின் குறுக்கே உள்ள அனுமன்தண்டலம், மாகறல் மற்றும் பாலாற்றில் பழைய சீவரம் தடுப்பணைகள் நிரம்பி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டப் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 361 ஏரிகளில் 21 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், 22 ஏரிகள் 75 சதவீதத்தையும், 69 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 14 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், 50 ஏரிகள் 75 சதவீதத்தையும், 102 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியிருப்பதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. ஏரிகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.