கீழடியில் நடைபெற்று வந்த 9-ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுடன் நிறைவடைகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய அரசு முதன் முதலாக அகழாய்வு பணிகளைத் தொடங்கியது. தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கி, மூன்று கட்ட அகழாய்வை நடத்தி முடித்தது. பின்னர், தமிழகத் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கூடுதலாக கீழடியுடன் கொந்தகை, அகரம், மணலுாரில் நடத்தப்பட்டது.
முதற்கட்டமாக நடந்த அகழாய்வில் தமிழகத்தின் நாகரிகத்தை அறியும் வகையில் பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து, நடந்த 8 கட்ட அகழாய்வு பணிகளின் போதும், முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.
இதையடுத்து, கீழடி, கொந்தகை, மணலூர் உள்ளிட்ட அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஒன்பதாம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி கீழடியில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்தன. இதுவரை நெசவு தொழிலில் பயன்படுத்தப்படும் தக்கழி, களிமண் குண்டு, நெசவு ஊசி, படிக எடைக்கல், பாம்பு உருவ சுடுமண் பொம்மை, விலங்கு உருவ பொம்மை, தங்க ஊசி உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
அகழாய்வு பணி ஜனவரியில் தொடங்கி செப்டம்பரில் வழக்கமாக முடிவடையும். இந்தாண்டு பணிகள் இன்றுடன் முடிவடைகிறது.
கொந்தகையில் ஏற்கனவே அகழாய்வு நடந்த இடத்தின் அருகே மூன்று குழிகள் தோண்டப்பட்டு 26 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் 14 தாழிகள் திறக்கப்பட்டு அதில் உள்ள எலும்புகள், சுடுமண் கிண்ணங்கள், குடுவைகள், சுடுமண் பானைகள் உள்ளிட்டவை வெளியே எடுக்கப்பட்டு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.
கொந்தகையில் இதுவரை 158 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. கீழடி, கொந்தகையில் அகழாய்வு பணிகள் நிறைவடைந்தாலும் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.